ஐந்திணை ஐம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
இந்நூல் முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்திணைக்கும் பத்துப் பாடல்களைப் பெற்றுள்ளமையால் 'ஐந்திணை ஐம்பது' எனப் பெயர் பெற்றது. இந் நூலின் ஆசிரியர் மாறன் பொறையனார்.
நூல்
பாயிரம்
பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரிய
வண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேரா தவர்.
மெய்யம்மையான இலக்கப் புள்ளி யிடுவதாகிய கணக்கிற் றேர்ச்சியுள்ள மாறன் பொறையன் என்ற சிறப்புப்பெயர் பெற்ற புலவர் பெருமான், மக்கட் பண்புகளை, ஆராய்ந்தறிய அவாவிக் கொண்டிருக்கும் படியான, உயர்ந்தோராகிய உலகமக்கள், நூற்பயனாகிய அகப் பொருள்களின் நுட்பங்களை, நன்குணரும்படியாக, அகப்பொருட்டுறைகள் பலவற்றை சேர்த்து, செய்யுள் வடிவமாக இயற்றிய, முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்தொழுக்கங்களினையும் தம்முள் அமைத்துக் கொண்டுள்ள ஐம்பது செய்யுட்களையும், விருப்பத்துடன், படித்து அறியாத மக்கள், செவ்வையான தமிழ் மொழியின் பெரும் பயனை, அடையப்பெறாதவர்களாவார்கள்.
1. முல்லை
இடம் - காடும் காடு சேர்ந்த இடமும்
ஒழுக்கம் - ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து
செல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி - நல்லாய்
இயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ
மயங்கி வலனேருங் கார். 1
"(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள்.
No comments:
Post a Comment